தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே மகாராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் முருகையன் என்பவருடைய மகன் சண்முகம் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக விடுமுறை நாளில் சண்முகம் கட்டிடப் பணிகளுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பழியஞ்சநல்லூர் கீர்த்திமானாரு அருகே மேல அகலங்கன் வாய்க்கால் சிமெண்ட் தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கனரக வாகனமான கான்கிரீட் கலவை எந்திரம் கான்கிரீட் கொட்ட வரும்போது நிலை தடுமாறி தடுப்பு சுவர் கட்டிட பணி செய்து கொண்டிருந்த இடத்தில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கிய சண்முகம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சண்முகம் உடல் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் சண்முகத்தின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் இதற்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.