உலகப் புகழ் பெற்ற மைசூர் அரண்மனையின் வடக்கு வாசல் அருகே உள்ள புறாக்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தானியங்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். பொதுமக்களால் வீசப்படும் தானியங்களோடு ஒரு ஜெயின் அமைப்பின் சார்பாக தினமும் இரண்டு மூட்டை கோதுமை, சோளம், அரிசி ஆகியவையும் புறாக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதிகமாக வழங்கப்படும் உணவு மைசூர் அரண்மனை சுற்றுப்புறத்தில் தூய்மையை பாதித்தது மட்டுமல்லாமல் புறாக்களின் எச்சம் அதிகளவில் படிவதற்கும் வழி வகுத்துள்ளது.

இதனால் மைசூர் அரண்மனை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கட்டிடத்தின் பக்கத்தில் புறாக்களுக்கு அதிகப்படியான உணவு அளிப்பதால் ஏற்படும் எச்சங்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மைசூர் அரண்மனையின் வடக்கு வாசலில் அதிக அளவில் தானியங்கள் கொட்டுவது கட்டிடத்தின் தூய்மையும் அழகையும் கெடுக்கும் என்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புறாக்களுக்கு உணவளிக்கும் இடத்தை பாரம்பரிய கட்டடங்களில் இருந்து படிப்படியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.