உலகப் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளில் 2 வது வீடாக போற்றப்படக்கூடியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் மட்டுமே கடற்கரை உள்ளது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து புனித நீராடி விட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் திருச்செந்தூர் கடலானது  நேற்று அதிகாலையில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி உள்ளது.

இவ்வாறு மாதம் தோறும் பௌர்ணமி, அமாவாசையில் கடல் உள்வாங்குவது வழக்கம். அதைப்போல் இன்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு நாழிக்கிணறு பகுதியிலிருந்து அய்யா கோவில் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு பழமையான சுவர் ஒன்று தென்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாதவாறு காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகப்படியாக காணப்படுகிறது. இதை தொடர்ந்து ஆபத்தை உணராத பக்தர்கள் கடல் உள்வாங்கிய பகுதிக்குள் சென்று பாறையின் மேல் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பக்தர்களை பாதுகாப்பான இடம் வரை மட்டும் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.