சீனாவில் ஒரு மனித வள (HR) மேலாளர், 22 போலி ஊழியர்களை உருவாக்கி, 8 ஆண்டுகளாக சம்பள மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காய் நகரில் உள்ள தொழிலாளர் சேவை நிறுவனத்தில் பணியாற்றிய யாங் (Yang) என்ற நபர், தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி, நிறுவனம் கண்காணிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கினார். மொத்தம் 16 மில்லியன் யுவான் (சுமார் ரூ.18 கோடி) தொகையை மோசடி செய்து, தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் மாற்றியதாக South China Morning Post (SCMP) தகவல் தெரிவித்துள்ளது.

யாங், சம்பள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தபோது, சம்பள கணக்கு தணிக்கை (Salary Audit) நடைமுறைகள் இல்லை என்பதை புரிந்துகொண்டார். இதனால், “சன்” (Sun) என்ற ஒரு போலி ஊழியரை உருவாக்கி, அவரின் பெயரில் சம்பளம் செலுத்தி, சொந்த வங்கி கணக்கில் அந்த தொகையை மாற்றினார். இதற்கிடையில், தொழிலாளர் சேவை நிறுவனம், சன் என்ற ஊழியருக்கு சம்பளம் செலுத்தப்படவில்லை என்று புகார் செய்தபோது, யாங் மறுப்பு தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அடுத்த 8 ஆண்டுகளில், மேலும் 21 போலி ஊழியர்களை உருவாக்கி, அவர்களுக்கு முறையாக வேலைக்குச் சென்றதாக பதிவுகளை வைத்திருந்தார்.

இந்த மோசடி 2022ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. தொழில்நுட்ப நிறுவனத்தின் நிதி துறை, சன் என்ற ஊழியர் சம்பளம் பெற்றுவந்தாலும், யாரும் அவரை ஒருபோதும் அலுவலகத்தில் காணவில்லை என சந்தேகமடைந்தனர். இதனால், சம்பள கணக்குகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் குறித்து ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட்டது. இதில், சம்பள கணக்குகளில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்பதும், 22 போலி ஊழியர்கள் மூலம் பணம் திருடப்பட்டிருக்கலாம் என்பதும் உறுதியானது.

யாங் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார். அவருக்கு முறையான விசாரணை நடத்தப்பட்ட பிறகு, 10 ஆண்டுகள் 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கூடுதலாக, அவருக்கு அரசியல் உரிமைகள் ஒரு வருடத்திற்கு நீக்கப்பட்டதோடு, அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம், சம்பள கணக்குகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன தணிக்கை நடைமுறைகள் குறித்து பல நிறுவனங்களும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த தேவை என்பதைக் காட்டுகிறது.