திருப்பத்தூரிலிருந்து தர்மபுரியை நோக்கி கடந்த 27-ம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென நடுப்பகுதியில் உள்ள ஒரு சீட்டில் இருந்து  புஸ் புஸ் என்ற சத்தம் வந்தது. இதைத்தொடர்ந்து பேருந்தில் உள்ளவர்கள் சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பாம்பு ஒன்று சீட்டுக்கடியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனால் பயந்து போன பயணிகள் பாம்பு பாம்பு என்று அலறினர்.

பின் பேருந்தை நிறுத்துமாறு சத்தமிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். இதையடுத்து பயணிகள் அனைவரும் அலறியடித்து கீழே இறங்கினர். இதைப் பார்த்த அந்தப் பகுதியில் உள்ள சில இளைஞர்கள் கம்புகளுடன் வந்து பேருந்தில் இருக்கும் பாம்பை தேடினர். பின் அதை அடித்து பேருந்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.