
உத்திரபிரதேசத்தில் மஹாசி பகுதியில் 30 கிராமங்கள் உள்ளன. அங்கு வந்த ஓநாய்கள் கூட்டத்தின் தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 26 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
இதுவரை வனத்துறையினர் மொத்தம் 3 ஓநாய்களை பிடித்ததோடு, அதனை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் தெர்மல் ட்ரோன்களை பயன்படுத்தி மற்ற ஓனாய்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது, கடந்த ஜூலை 17-ம் தேதி ஓநாய் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக முதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
ட்ரோன்களின் உதவியோடு ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக முயற்சி செய்கின்றனர். அதோடு அப்பகுதியில் 6 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து வழித்தடங்களில் 4 பொறிகள் வைத்துள்ளோம். மனிதர்களை மட்டுமே தாக்கக்கூடிய 5-6 ஓநாய்கள் இப்பகுதியில் உள்ளனர்.
இந்த ஓநாய்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் இப்பகுதிக்கு வந்துள்ளது என்று கூறினார். மேலும் குழந்தைகளுடன் குடும்பமாக திறந்த வெளியில் யாரும் தூங்க வேண்டாம் என்று அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.