
சேலம் அம்மாபேட்டை பகுதியில் பழனிவேல்(49) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள காவல் துறையில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான அவர் வேலைக்கு செல்லாத காரணத்தால் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. தினமும் சென்று குடிப்பதால் அவருடைய மனைவி அவரை வீட்டின் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் வெகு நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த பழனிவேல் விட்டோடியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை தேடி காவல் துறையினர் வீட்டிற்கு வந்தனர். அப்போது காவல்துறையினர் பழனிவேலை பற்றி மனைவியிடம் விசாரித்தனர். அதற்கு பழனிவேலின் மனைவி அவர் வீட்டில் இல்லை காலையில் வாருங்கள் என்று கூறினார். ஆனால் காவலர்கள் விட்டோடி நோட்டீசை கொடுக்க தான் வந்துள்ளோம் என்று அங்கு காத்திருந்தனர்.
அதன்பின் சந்தேகமடைந்த காவல்துறையினர் வீட்டினுள் சென்று பார்த்த போது பாத்ரூமில் உள்ளே கதவை தட்டிக்கொண்டு “ஐயா என்னை காப்பாற்றுங்கள்” என்று பழனிவேல் சத்தமிட்டார். அப்போது காவல்துறையினர் கதவை திறந்து பார்த்தனர். பாத்ரூம் உள்ளே பழனிவேல் அரைகுறை ஆடையோடு காயங்களுடன் இருந்தார். இதனைக் கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியாயினர். அவர்களிடம் தன்னுடைய மனைவி தன்னை அடித்து வெந்நீரை ஊற்றி கொடுமை படுத்துகிறார்கள் என்று புலம்பினார். இதைத் தொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவரின் விசாரணையில் ஏட்டு பழனிவேல் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லவில்லை. அதோடு பல பெண்களுடனும் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்றும், வீட்டுக்கு வந்தால் ஆடைகளை அவிழ்த்து போட்டு இருக்கிறார் என்றும் , இதனை கண்டிக்கும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது.
இவரது இந்த செயலால் அவருடைய மனைவி காவல் துறையினரை சந்தித்து பலமுறை புகார் கொடுத்த போதும் ஒழுங்காக இருப்பேன் என்று கூறும் பழனிவேல் மீண்டும் மது குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு கஷ்டப்பட்ட மனைவி கடந்த 8 ம் தேதி அவரை பிடித்து வந்து வீட்டில் அடைத்து வைத்தாலாவது.. திருந்தி விடுவாரோ.! என்ற எண்ணத்தில் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்தார் என்று விசாரணையின் மூலம் தெரிய வந்தது.