மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் கெங்கையூர் திருவிழாவை முன்னிட்டு, சிலை நீராட்டத்திற்காக ஒரு பழைய கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞர், கயிறு கட்டி கிணற்றில் இறக்கப்பட்ட போது, திடீரென கயிறு அறுந்தது.

அவர் கீழே விழுந்ததை கண்டு, தொடர்ந்து ஒருவர் பின்னொருவராக கிணற்றில் இறங்கிய ஏழு இளைஞர்களும் உயிரிழந்தனர். இந்த பரிதாபமான சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களை தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். உடனே அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, உடற்கூறு பரிசோதனையில் விஷவாயு தாக்கத்தால் அவர்கள் இறந்தது தெரியவந்துள்ளது.

விசாரணையில், அந்தக் கிணற்றில் கிராமத்திலிருந்து கழிவுநீர் கால்வாய் வாயிலாக கழிவுகள் கலந்துள்ளதாலும், அதனால் கிணற்றுக்குள் விஷவாயு உருவாகி இருந்ததையும் காவல் ஆய்வாளர் மனோஜ் ராய் உறுதி செய்தார்.

இந்நிலையில், காண்ட்வா மாவட்டக் கலெக்டர் ரிஷவ் குப்தா, உயிரிழந்த ஏழு இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த கிணற்றை உடனடியாக மூடுமாறு அதிகாரிகளுக்குப் உத்தரவிட்டுள்ளார்.