
திமுக கட்சியின் எம்பி ஆராசா கலைஞர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழா குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார். இடுகுறித்து அவர் கூறியதாவது,
எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கருணாநிதிக்கு நிறுவப்பட்ட சிலையை பாஜக தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி தான் என்பதை அறிவாரா.
“உறவுக்கு கை கொடுக்கும் உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்பதை கருணாநிதி எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில் தான் மத்திய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும் ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை வழங்காமலும் தமிழ்நாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முறையாவது படித்துப் பார்க்கட்டும். ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் திமுக கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரே கருணாநிதியின் தலைமை பண்பு குறித்து பாராட்டி இருக்கிறார். அதே தலைமை பண்மையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிறைந்திருக்கிறது.