
திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான் என சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் இதற்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார். தென்காசியில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், நாங்கள் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு செல்ல காரணம் எம்ஜிஆருக்கு அடுத்து அதிமுகவில் நல்ல தலைவர்கள் இல்லை என்ற ஒரே காரணத்தினால் தான். அரசியலில் திறமையான தலைவரான கருணாநிதியின் வழியில் நான் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டேன்.
ஜெயலலிதாவிற்கு பிறகு பலர் திமுகவிற்கு வந்துள்ளனர். பஞ்சத்தால் திமுகவிற்கு வந்தவர்கள் கிடையாது நாங்கள். நாங்கள் திமுகவிற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதிமுக மற்றும் திமுக என எங்களை பிரிக்க வேண்டாம். எங்களுடைய உடம்பில் ஓடிக் கொண்டிருப்பது திமுகவின் ரத்தம் தான் என்று பேசிய அமைச்சர் தென்காசியில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நீண்ட காலமாக தமிழகத்தில் இருக்கும் அரசு நிலங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.