
மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது ஐபிஎல் போட்டியில் காயத்திற்கு பிறகு மீண்டும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் மற்றும் மகன் அங்கத் ஆகியோர் வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியை நேரில் பார்வையிட்டனர். இந்த நேரத்தில் மைதானத்தில் இருந்த கேமராக்கள் சிறிது நேரம் அங்கத்தின் படங்களை பதிவு செய்தது. 3 விநாடிகள் நீளமான அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி, பலரும் அவரது மகனைப் பற்றி கருத்துகள் தெரிவிக்கத் தொடங்கினர்.
இதனால் வருத்தமடைந்த சஞ்சனா, இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு, தனது கோபத்தையும் மனவேதனையையும் வெளிப்படுத்தினார். “எங்கள் மகன் உங்கள் பொழுதுபோக்குப் பொருள் அல்ல,” என்றும், “இணையம் என்பது ஒரு கொடூரமான இடம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சஞ்சனா மேல் தனது பதிவில், “ஜஸ்பிரித் மற்றும் நான் எங்கள் மகன் அங்கத்தை சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி வைக்க முயற்சி செய்கிறோம். மைதானத்தில் அவர் இருந்தது பும்ராவுக்கு ஆதரவாக மட்டுமே, வேறு எதுவும் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்,” என கேட்டுக்கொண்டார். 3 விநாடிகள் கொண்ட வீடியோவைக் கொண்டு குழந்தையின் ஆளுமை, பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில் முடிவெடுக்கப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “ஒரு 1.5 வயதான ஒரு குழந்தையைப் பற்றி ‘அதிர்ச்சி’ மற்றும் ‘மனச்சோர்வு’ என்ற சொற்களை பயன்படுத்துவது, நமது சமுதாயத்தின் நிலையை பிரதிபலிக்கிறது,” என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
சஞ்சனா கணேசனின் இந்த பதிவை பலரும் ஆதரித்து வருகின்றனர். குழந்தைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அவர்களின் தனிப்பட்ட வாழ்வை மதிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். “இன்றைய உலகில் கொஞ்சம் நேர்மையும், கொஞ்சம் கருணையும் நீண்ட தூரம் செல்லும்,” என்று சஞ்சனா தனது பதிவை முடித்தார். அவரது மன வேதனை மற்றும் நேர்மையான கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவும் ஆதரவைப் பெற்றுள்ளது.