ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோடு விசாவையும் ரத்து செய்துள்ளது. அதோடு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் 92 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பாகிஸ்தானும் இந்தியாவுடன் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அதோடு எல்லையில் ராணுவ வீரர்களையும் குவித்து வைத்துள்ளதால் போருக்கு தயாராகிறதா பாகிஸ்தான் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை மந்திரியுமான க்வாஜா ஆசிப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எங்களுக்கு உளவுத்துறை மூலமாக பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்த இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தானியர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாக இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது. நாங்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம். மேலும் நாங்கள் தற்காப்புக்காகவே தற்போது தயார் நிலையில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.