
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் லிவிங்ஸ்டன்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்வியியல் கல்லூரியில் முதல்வராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை லிவிங்ஸ்டன் மன்னார்புரம் விலக்கு வழியாக திசையன்விளை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் வாழைத்தோட்டம் அருகே சென்ற போது லிவிங்ஸ்டனின் மோட்டார் சைக்கிளும், திசையன்விளையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெய்சன்(20) மற்றும் கரண்(23) ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த லிவிங்ஸ்டன், ஜெய்சன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கரண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கரணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.