நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாலாஜி வேளாங்கண்ணியில் இருக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நண்பரான முகேஷ் குமார் என்பவர் வேளாங்கண்ணியில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் வேலை முடிந்து பாலாஜியும், முகேஷ் குமாரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பிரதாபராமபுரம் நான்குவழிச்சாலையில் பக்கவாட்டில் இருந்து வந்த இருசக்கர வாகனம் நண்பர்கள் பயணித்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த எதிர் தரப்பை சேர்ந்த சரவணன், ஜெயபால் ஆகியோர் செங்கற்களால் பாலாஜியை தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயபால், சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.