
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 25 மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு வேன் பள்ளியிலிருந்து புறப்பட தயாரானது. அந்த வேனை ரித்திக் குமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் வெள்ளாண்டி வலசு பகுதியில் சென்ற போது வேனில் பயணம் செய்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு மாணவர் கந்தகுரு என்ற மாணவரை வேனில் இருந்த கம்பியில் தள்ளிவிட்டு கழுத்தை நெரித்தார்.
இதனால் கந்தகுரு மயங்கினார். இதனை பார்த்து பிற மாணவ மாணவிகள் கூச்சலிட்டனர். உடனே ரித்திக்குமார் தனியார் மருத்துவமனையில் கந்தகுருவை சிகிச்சைக்காக அனுமதித்தார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கந்தகுரு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தகுரு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 14 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.