
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணி விழுந்தான் பகுதியில் சர்வீஸ் சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் வேண்டி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் வலுக்கட்டாயமாக போலீசார் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். அந்த சமயத்தில் சேலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி காரில் வந்து கொண்டிருந்தார்.
அவருடைய காரை போராட்டக்காரர்கள் வழிமறித்தனர். உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி காரில் இருந்து கீழே இறங்கி வந்த நிலையில் அங்கிருந்த பெண்கள் எடப்பாடி பழனிச்சாமியை சூழ்ந்து கொண்டு எங்க பிள்ளைங்க தவிக்கிறாங்க. நீங்க தான் சார் பார்த்துக்கணும். நீங்க தான் சரி எப்படியாவது எங்களுக்கு உதவி செஞ்சு ஒரு பஸ் ஸ்டாண்ட் மற்றும் சர்வீஸ் சாலை வர வைக்கணும். மேலும் எங்க புள்ளைங்க எல்லாரும் தவிப்பதால் நீங்க பார்த்துக்கோங்க என்று பெண்கள் மனம் வெதும்பி அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.