காலநிலை மாற்றத்தின் விளைவாக அடுத்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆண்டுக்கு 8 மாதங்கள் வரை வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை அண்ணா பல்கலை ஆய்வில் தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ உள்ளிட்ட விளைவுகளால் அதீத வெப்பம் மற்றும் அதீத மழை போன்ற பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். கடல் மற்றும் நிலப்பரப்பில் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் தான் இதற்கு முக்கிய காரணம்.

இந்த நிலையில் நாட்டின் 21 நகரங்களில் அடுத்த 25 ஆண்டுகளில் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சென்னை அண்ணா பல்கலையின் பேரிடர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்ற மையம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் ஒரே ஆண்டில் எட்டு மாதம் வெப்ப அலை வீசும் என்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என தெரிவித்துள்ளது.