சென்னையில் வடமாநில பெண் ஒருவருக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கரைக்குச் செல்ல ரேபிடோ ஆட்டோவைக் கேட்ட வடமாநில பெண், 163 ரூபாய் கட்டணத்திற்கு 200 ரூபாய் கொடுத்து சில்லறை கேட்டுள்ளார்.

ஆனால் சில்லறை இல்லாததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுநர் ஆபாசமாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தை பெண் முகநூலில் வீடியோவுடன் பதிவிட்டு, “சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமில்லை” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

வாக்குவாதத்தின் போது ஆட்டோ ஓட்டுநர், “ஐ வாண்ட் மை மணி” என்று கூச்சலிட்டதும், பெண் “ஐ டோன்ட் ஹேவ் சேஞ்ச்” என பதிலளித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் பணத்தை தூக்கியெறிந்தார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், அவமானகரமான வார்த்தைகளை பயன்படுத்தியதும், எச்சில் துப்பியதும் வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆண் நண்பர் அடையாறு சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த ரேபிடோ ஆட்டோ ஓட்டுநரான பால்பாண்டியை போலீசார் கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது குறித்தும், சம்பவத்தின் முழு பின்னணியும் தெரிந்து கொள்ள போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.