
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்ச பள்ளியில் அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அத்திக்கடவு – அவிநாசி திட்டம் என்பது 60 ஆண்டுகால கனவு திட்டமாகும். இந்த திட்டத்திற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். 2011 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம் இந்த திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
பிறகு முன்னாள் முதல்வர் பழனிச்சாமி காலத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் நாங்கள் அடையாளம் காணப்பட்டவர்கள். அன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்த இருவருடைய படங்களும் விழா மேடையிலும் அழைப்பிதழிலும் இடம்பெறவில்லை. விழாவை புறக்கணித்தேன் என்பதை விட என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்பதுதான் உண்மை என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் இது குறித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செங்கோட்டையன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் இருந்து விலகிச் சென்றதால் தான் அமமுக தொடங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பணபலம் மற்றும் அதிகார பலம் கூட்டணி இருந்தும் ஏன் எடப்பாடி பழனிச்சாமியால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.
பிறகும் அதிமுகவிற்கு தோல்வி தான் கிடைத்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட திமுக ஆட்சியை அமைக்க நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் உதவி செய்தார். தன்னை வழக்கில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் அதிமுகவை ஒரு கேடயமாக பயன்படுத்தி வருகின்றார். இதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி மூடு விழா நடத்தி விடுவார் என டிடிவி தினகரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.