கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நெடுங்காலமாக இந்த நாட்டில் தேர்தல் அரசியலையே செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் அரசியலைப் பேசி முன்னெடுக்கவே இல்லை. தேர்தல் வியூக வகுப்பாளர்களை கொண்டு தேர்தலை வெல்வது மட்டுமே உங்களுடைய நோக்கமாகவும் வியாபாரமாகவும் உள்ளது. நீங்கள் செய்வது தேர்தல் அரசியல் மட்டும் தான், மக்கள் அரசியலை எப்போதுதான் செய்யப் போகிறீர்கள்? மக்களின் பிரச்சனைக்கான போராட்டங்கள் மற்றும் தீர்வுகள் எதையுமே முன்னெடுப்பது கிடையாது.

இங்கு மக்கள் அரசியல் தான் தேவை. பீகாரில் இருந்து ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர் வருகின்றார் என்றால் உங்களுக்கெல்லாம் மூளை, அறிவு ஏதாவது இருக்கிறதா இல்லையா? . திருப்பரங்குன்றத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை பிரசாந்த் கிஷோருக்கு தெரியுமா? அத்திக்கடவு அவிநாசி என்றால் என்ன தெரியுமா?. அதிமுக மற்றும் திமுகவின் மூத்த தலைவர்களை தாண்டி ஒரு வியூக வகுப்பாளர் இங்கு தேவையா? ஒரு தொகுதியில் கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? 300 கோடி காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம். தமிழ்நாட்டிலேயே மாபெரும் மேதைகள் இருக்கிறார்கள் சீமான் தெரிவித்துள்ளார்.