
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அவரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு அரசியல் களம் மிகப் பரபரப்பாக இருக்கும் என இப்போதே தெரிகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் திமுகவை மீண்டும் மீண்டும் சீண்டும் வகையில் சீமான் பெரியார் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதும் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படியான நிலையில். திண்டிவனத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவருடைய மறைவை தொடர்ந்து அவருடைய வீட்டுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று சென்று இருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக கூட்டணியை உடைப்பதற்கு நடந்த எத்தனையோ சதி முயற்சிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி முறியடித்துள்ளது. புதிய கட்சிகள் தொடங்கினாலும் எத்தனை பேர் வந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எதையும் சந்திக்க நாங்கள் தயார் என திருமாவளவன் பேசியுள்ளார்.