
தமிழில் வெளியான இந்தியன், பம்பாய், முதல்வன் ஆகிய படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. 54 வயதான மனிஷா கொய்ராலா புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில் மனிஷா கொய்ராலா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த பேட்டியில் “வயது என்பது சினிமாவில் ஒரு பிரச்சனையே இல்லை. கதாநாயகிகளின் வயதை வைத்து விமர்சனம் செய்யும் யாரும் கதாநாயகர்களின் வயதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
நடிகைகளுக்கு வயதாகி விட்டாலே சகோதரி கதாபாத்திரமும் தாய் கதாபாத்திரமும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வயதான நடிகைகளும் அதிரடி கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்பதை இதற்கு முன்பு எத்தனையோ மூத்த நடிகைகள் நிரூபித்து விட்டனர்.
அவர்களைப் போன்று நானும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சவாலாக எடுத்துக் கொண்டு சிறப்பாக நடிப்பேன். புதுப்புது கதாபாத்திரங்களில் நடித்து எனது திறமையை நிரூபிக்க விரும்புகிறேன்.
வயது என்பது வெறும் நம்பர் தான். 50 வயதை கடந்தாலும் சந்தோசமாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்” எனக் கூறியுள்ளார்.