கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் ஆசிரியை சங்கீதாவின் ஆவணங்களை திருடி அதன் மூலம் லோன் வாங்கி திருட்டுத்தனமாக கார் வாங்கிய வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி என்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலானது. இந்நிலையில் கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மதியழகன் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கைதான ராஜா என்பவருக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்த ஒரு தொடர்பும்  கிடையாது எனவும் அவர் எங்கள் கட்சியை நிர்வாகி அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இது தொடர்பாக வெளியான செய்திகள் அனைத்தும் முற்றிலும் வதந்தி என்றும் அவருக்கு தமிழக வெற்றி கழகத்திலோ அல்லது விஜய் மக்கள் இயக்கத்திலோ எந்தவிதமான பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என்றும்  மதியழகன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தில் நிர்வாகி ஒருவர் மோசடி வழக்கில் கைதானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை என்று தமிழக வெற்றிக்கழகம் விளக்கம் கொடுத்துள்ளது கட்சியினர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.