தமிழக முதல்வர் ஸ்டாலின் இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்து உத்தரவிட்ட நிலையில் அவர் இன்று துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதிதாக மேலும் பதவி ஏற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெறும் நோக்கில் அனைத்து அமைச்சர்களும் செயல்பட வேண்டும். அரசு என்பது கூட்டுப்பொறுப்பு எனவே அமைச்சர்களின் கூட்டு சேர்க்கை தான் முதல்வராகிய நான். துறை மாறிய அமைச்சர்கள் புதிய துறையை நன்றாக கவனித்து ‌ பணியாற்ற வேண்டும். இதனையடுத்து தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதலமைச்சர் ஆன எனக்குத் துணையாக அல்ல நாட்டு மக்களாகிய உங்களுக்கு தான் என்றென்றும் துணையாக இருக்கப் போகிறார் என்று பதிவிட்டுள்ளார்.