
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இரட்டை தலைமையில் அதிமுகவை வழிநடத்தினர். அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் உள்ளார். தொடர்ந்து அதிமுகவில் பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நீங்கள் அதிமுகவிற்கு இடையூறு பண்ண வேண்டாம். உண்மையிலேயே அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் ஓபிஎஸ் ரகசியமாக சொல்லிவிடுங்கள்.
வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. உண்மையிலேயே அதிமுகவில் அவர் இணைய வேண்டும், அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொள்வதை அவர் சொல்லிவிட வேண்டும். அதிமுக வளர வேண்டும் என்று நினைத்தால் வழக்கு மன்றத்திற்கே போகக்கூடாது. ஆறு மாதம் எதுவும் செய்யாமல் பொறுமையாக இருங்கள் அதிமுகவில் நாங்கள் உங்களை இணைத்துக் கொள்கிறோம் என அவர் பேசி இருந்தது அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இப்படியான நிலையில் ராஜன் செல்லப்பாவுக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் இணைய வேண்டும் என்று தான் நானும் சொன்னேன். என்னை அழைத்துக் கொண்டு போய் யாரிடமும் சேர்க்க வேண்டும் என்று இதுவரை நான் சொன்னதே கிடையாது. எப்போதும் அதை சொல்லவும் மாட்டேன். ராஜன் செல்லப்பா இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எனக்காக யாரும் பரிந்து பேச வேண்டிய அவசியமில்லை. எங்களையெல்லாம் சிபாரிசு செய்வது மாதிரியான தோணியில் அவர் பேசி இருப்பது அவருக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார்.