மைசூர்-ஹுப்ளி ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோப்பல் நோக்கிப் பயணித்த மக்மத் பாஷா அட்டார் என்ற பயணி, டிக்கெட் சரிபார்க்க வந்த டிக்கெட் பரிசோதகரிடம்  கன்னடத்தில் பேசுமாறு கேட்டார். ஆனால், அந்த TTE, தானுக்கு ஹிந்தி மட்டுமே பேசத் தெரியும் என்று கூறி, உடனே கோபமடைந்து, அட்டாரை அறைந்ததாக புகார் எழுந்துள்ளது.

அட்டார், இந்த சம்பவத்தை கைப்பேசியில் பதிவு செய்ய முயன்றதும், TTE அவருடைய மொபைலை பிடித்து எறிந்தார் என்றும், தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக மிரட்டினார் என்றும் தெரிகிறது. அருகில் இருந்த மற்ற பயணிகள், அட்டார் சாதாரணமாகவே கன்னடத்தில் பேசுமாறு கேட்டதாகவும், TTE-இன் மோசமான நடத்தைதான் பிரச்சினையை பெரிதாக்கியதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

இந்த சம்பவத்தையடுத்து, பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரயில்வே உள்ளிட்ட பொது சேவைகளில், குறிப்பாக கர்நாடக மாநிலத்தில், கன்னடம் பேசும் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பதே ஆர்வலர்களின் வலியுறுத்தல். தெற்கு மேற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாநில மொழியின் மதிப்பை பாதுகாக்க வேண்டும் என்றும், இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடக்காத வகையில் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.