எனது அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன் என்று இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்..

மகளிர் அணி இந்தியா மற்றும் மகளிர் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியின் இன்னிங்ஸ் 16.2 ஓவரில் 80 ரன்களில் முடிந்தது. இந்த குறைந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து மகளிர் அணி 11.2  ஓவரில் 6 விக்கெட் இழந்து 82 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது. 3வது போட்டியும் இன்று அதாவது டிசம்பர் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து, அணியை நினைத்து பெருமைப்படுவதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் என்ன சொன்னார்?

தோல்விக்கு பின் பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “இன்னும் 30 முதல் 40 ரன்கள் எடுத்தால் இன்றைய போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். கடைசி ரன் வரை நாங்கள் போராடியதால் எனது அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் எப்போதும் நேர்மறையான அணுகுமுறையுடன் விளையாட விரும்புகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றைய (நேற்று) போட்டியில் எங்களது சில பேட்ஸ்மேன்கள் பந்துகளை சரியாக யூகிக்க முடியவில்லை. இதுதவிர இங்கிலாந்து நன்றாகப் பந்துவீசியதால், எங்களை சுதந்திரமாக ஸ்கோர் செய்ய அனுமதிக்கவில்லை.. ஆரம்ப விக்கெட்டுகளை இழந்ததால் 120 ரன்களை இலக்காகக் கொண்டிருந்தோம், ஆனால் அதை அடைய முடியவில்லை. ஆனாலும், எங்கள் பந்துவீச்சாளர்கள் சவாலை ஏற்கத் தயாராக இருந்தனர், மேலும் நாங்கள் விரும்பியபடி பந்துவீசினோம்” என்று கூறினார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்ய வந்த இந்திய அணி தொடக்கத்தில் மிகவும் மோசமாக இருந்தது. முதல் ஓவரிலேயே ஷபாலி வர்மா டக் அவுட் ஆனார். அதன்பிறகு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மட்டும் தனித்து விளையாடி 30 ரன்கள் எடுத்தார். மேலும் ஸ்மிருதி மந்தனா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பிறகு வந்த வீராங்கனைகள்  சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ஹர்மன்பிரீத் கவுர் (9), தீப்தி சர்மா (0), ரிச்சா கோஷ் (4), பூஜா வஸ்த்ரகர் (6) என அனைவருமே ஏமாற்றமளித்தனர்.

அதேவேளை இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அலிஸ் கேப்சி 25 ரன்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட் 16 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹீதர் நைட் 7 ரன்களிலும், சோஃபி எக்லெஸ்டோன் 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.