எழுத்துக்களை திருத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒயிட்னர் பொருளை போதைப் பொருளாக இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இத்தகைய போதைக்கு அடிமையானவர்களை சிகிச்சைக்கு அழைத்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆவணங்கள் மற்றும் ஏடுகளில் தவறாக எழுதப்பட்டதை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் வோட்னரியில் டோலுயின், டிரை குளோரோ எத்திலின் போன்ற ஹைட்ரோ கார்பன் ரசாயன பொருட்கள் உள்ளது. இவை அரை வெப்பத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது.

இதனை நுகரும்போது இந்த ரசாயனங்கள் நேரடியாக நுரையீரலுக்குச் சென்று ரத்தத்தில் கலந்து மூளையை அடைகின்றது. அதனால் அடுத்த சில நிமிடங்களில் மித மிஞ்சிய அளவுக்கு போதை உணர்வு கிடைக்கிறது. இவ்வாறு அந்த பொருளை போதைக்காக பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே இது போன்ற ரசாயன பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு விற்பதை தடுப்பது குறித்தும் விற்பனையை ஒழுங்குமுறை செய்வது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் வைட்னரை போதைக்காக பயன்படுத்தும் மாணவர்களுக்கு ஆரம்ப நிலையிலே மனநல ஆலோசனைகளும் தேவைப்பட்டால் சிகிச்சைகளும் அளிப்பதால் அந்த பாதிப்பில் இருந்து அவர்களை மீட்டெடுக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.