
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாணார்புதூரில் நடந்த தாயும் மகனும் தொடர்பான தற்கொலை சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவசாயியான சரவணக்குமார் (47), கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது மனைவி சாந்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ ஆரம்பித்தார். குடிப்பழக்கத்தை கைவிடும்படி சரவணக்குமாரை அவரது தாயார் ராமாயம்மாள் (70) பலமுறை கேட்டும், அவர் பழக்கத்தை விடவில்லை என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், மனமுடைந்த ராமாயம்மாள், வீட்டருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணக்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சரவணக்குமாரைப் பார்த்த கிராம மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரவணக்குமாரை மீட்டு கோபி அரசு மருத்துவமனை வழியாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, ராமாயம்மாளின் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.