
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதன்பிறகு இந்த தாக்குதலுக்கு பின்புறம் பாகிஸ்தான் இருப்பதாக இந்திய அரசாங்கம் சந்தேகப்படுவதால் சிந்து நதிநீர் ஒப்பந்தம் முதல் விசா வரை அனைத்தையும் ரத்து செய்துள்ளதே. அதாவது பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீரை இந்தியா நிறுத்திய நிலையில் விசாவையும் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மருத்துவ காரணங்களுக்காக இருப்பவர்கள் 29ஆம் தேதியோடு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பலர் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிப்பதாக கூறப்படும் நிலையில் எங்களை இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என பல பாகிஸ்தான் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தன்னுடைய 2 குழந்தைகளின் இதய சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ள தந்தை தற்போது விசா ரத்தானதால் பாகிஸ்தான் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அடுத்த வாரம் டெல்லியில் இரு குழந்தைகளுக்கும் இதய ஆப்ரேஷன் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்குள் அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று கூறிவிட்டதால் தற்போது குழந்தைகளின் நிலையை நினைத்து அவர் கதறுகிறார். மேலும் அவர் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கும் வரை இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.