கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு அரங்கேற்றமான ஒரு குடும்பத் தகராறு பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமானம் கோவையில் இறங்கிய பின்னர், பயணிகள் அனைவரும் வெளியேறியதும் சிறிது நேரத்தில் ஒரு ஆணும், பெண்ணும் வெளியே வந்தனர். அப்போது அந்தப் பெண், பொதுமக்கள் முன்னிலையில், “என்னை திருமணம் செய்துகொண்டு, ஹனிமூன் போயிட்டு வரானா பொம்பளை பொறுக்கி!” என தனது கணவனை கடுமையாக திட்டத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்த அந்த நபரின் உறவினர் ஒருவர் முயன்றபோது, அந்தப் பெண் அவரது கன்னத்தில் அறைந்ததுடன், சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சண்டை பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது. காவலர்கள் சமாதானப்படுத்த முயன்றபோது, அந்தப் பெண் “safety, safetyன்னு சொல்லிட்டு காசு இருந்தா என்ன வேண்டுமானாலும் செய்வீங்களா?” என வாக்குவாதம் செய்தார். மேலும், அங்கு கூடியிருந்த மக்களிடம், “அவன் காரில் தப்பிச்சு போறான், யாரும் பிடிக்க முடியலையா?” எனக் கேட்டு, குரலை உயர்த்தி திட்டினார். இச்சம்பவம் பீளமேடு காவல் நிலையத்தில் பதிவாகி, தற்போது அந்த பெண் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.