
சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் 20 வயதான அர்ஜுன் என்பவர் வசித்து வரும் நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் காதலிக்க மறுத்த நிலையில் நேற்று இரவு அந்த பெண் வேலை முடிந்து நடந்து வரும்போது அவரை அர்ஜுன் வழிமறித்தார். பின்னர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தன்னை காதலிக்கவில்லை என்றால் உயிரோடு எரித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அப்போது அர்ஜுனுடன் ஜேம்ஸ் என்ற 20 வயது வாலிபரும் உடன் இருந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து அர்ஜுன் மற்றும் ஜேம்ஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.