குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள். சில நேரங்களில் அவர்கள் செய்யும் செயல் சுட்டித் தனமாகவும் சில நேரங்களில் வியக்க வைப்பதாகவும் இருக்கும். சமீபத்தில் கேரளாவில் 4வயது மகனை தாய் கண்டித்ததால் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்று போலீஸ் ஸ்டேஷன் என நினைத்து தீயணைப்பு நிலையத்திற்கு அந்த சிறுவன் சென்றான். அங்கு அந்த சிறுவன் தன் தாய் தன்னை கண்டித்ததால் உடனடியாக கைது செய்யுமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். போலீசார் என்று நினைத்து தீயணைப்புத் துறையினரிடம் அவர் கோரிக்கை விடுத்த நிலையில் உடனடியாக சிறுவனின் தந்தைக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அந்த சிறுவனின் தந்தை உடனே அங்கு வந்து தன் மகனை அழைத்துச் சென்றார்.

இதேபோன்று தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அதாவது விஸ்கான்சின் மாகாணத்தை சேர்ந்த ஒரு 4 வயது சிறுவன் தன்னுடைய தாய் ஐஸ்கிரீமை சாப்பிட்டதால் அவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த சிறுவன் மழலை குரலில் என் தாய் மிகவும் மோசமானவர். என்னுடைய ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டார். அவரை பிடித்து  ஜெயிலில் போடுங்கள் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுவனின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவனை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து புதிதாக ஒரு ஐஸ்கிரீமும் வாங்கிக் கொடுத்தனர். மேலும் இது கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் சிறுவயதிலேயே ஒரு பிரச்சனை என்றவுடன் போலீசை அணுகிய அந்த சிறுவனின் செயலை போலீசார் பாராட்டியுள்ளனர்.