இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பிரபலமாகி வருகின்றனர். இன்னும் சிலர் பொய்யான செய்திகளை பரப்பி பிரபலமாக முயற்சி செய்கின்றனர். அவ்வாறு அவர்கள் பரப்பும் வதந்திகள் சில சமயம் வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது வெளியான ஒரு வீடியோ வதந்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சரவணன் என்பவர் மனநல பிரச்சனையின் காரணமாக காளையார் கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது அங்கு ஆம்புலன்ஸில் இருந்து இறங்க மறுத்த அவர் அங்குள்ள கிரில் கதவில் ஏறி குரங்கு போல் குதித்து அருகில் இருந்தவர்களை பயமுறுத்தி துரத்தியுள்ளார். இதனால் அங்கே இருந்தவர்கள் தப்பி ஓடினர்.அதன் பின் பாதுகாவலர்கள் சரவணனை பிடித்து கைகளை கட்டி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இதனை வீடியோவாக எடுத்த ஒரு நபர் குரங்கு கடித்ததால் குரங்கு போன்று மாறினார் என்று ஒரு வதந்தியை ஏற்படுத்தி இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட சரவணனின் உறவினர்கள் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். மேலும் இது போன்ற வதந்திகள் பரப்புவது சரியானது அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.