புரி ஜெகன்நாதர் கோவிலில் புனித கொடியைப் போன்ற துணியைப் பிடித்தவாறு வட்டமிட்டு பறக்கும் கழுகு குறித்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில், புரி பகுதியில் திடீரென ஏற்பட்ட புயலுக்குப் பிறகு நடந்தது.

சாட்சி கூறியவர்கள், அந்த கழுகு முதலில் கோவிலின் மேற்கு வாசலை நோக்கிச் சென்றதாகவும், பின்னர் கடலுக்குப் பறந்ததாகவும் தெரிவித்தனர். அந்த கழுகின் கண்கவர் பறக்கும் காட்சி, அது பிடித்திருந்த துணி கோவிலின் கொடியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது உண்மையில் ஜெகந்நாதர் கோவிலின் கொடியா, இல்லை புயலால் பறந்த துணியா என்பது குறித்து கோவில் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இருப்பினும், அந்த வீடியோவில் காணப்படும் காட்சி பலரை ஆன்மீக உணர்வில் ஆழ்த்தி உள்ளது.

சிலர், கழுகை ஹிந்து புராணத்தில் விஷ்ணுவை ஏந்தும் கருடனாக ஒப்பிட்டுப் பார்த்து, இது ஒரு தெய்வீக செய்தியாக இருக்கலாம் என்றும், உலகம் முழுவதும் ஜெகந்நாதரின் ஆற்றல் பரவுவதற்கான அறிகுறியாக பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மறுபுறம், சிலர் இது ஒரு அபசகுனம் என்றும், துயரம் நிகழக்கூடிய எச்சரிக்கையாகக் கருதுகிறோம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.