
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் கவுதம் (47), வகுப்பறைக்குள் தனது ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு நுழைந்து, மாணவர்களை நாற்காலியால் தாக்க முயன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், மாணவர்கள் சிலர் அச்சத்துடன் வகுப்பறையிலிருந்து வெளியே ஓடுவதும், சிலர் சிரிப்பதையும் காணலாம்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கல்லூரி செயலர் வெங்கடேஷிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, சம்பந்தப்பட்ட பேராசிரியர் கவுதம் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.