சென்னை மாவட்டம் கொசவன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை அழைத்து கட்டுமான பணிக்கான செங்கற்களை சுமக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து செங்கற்களை சுமந்து செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

அந்த பகுதி மக்கள் இதுகுறித்து கேட்டபோது தலைமை ஆசிரியர் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது பள்ளியில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. உடற்கல்வி வகுப்பு நேரத்தில் அவர்கள் விருப்பப்பட்டு சில வேலைகளை செய்தனர். பள்ளியில் ஏற்கனவே சுற்றுசுவர் கட்டுமான பணி நடக்கிறது. பள்ளியின் உள்ளே புகுந்து செல்லும் பக்கத்து வீட்டில் உள்ள நபர் அவதூறு பரப்புவதற்காக வீடியோவை எடுத்து வைத்துள்ளார் என பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.