
தூத்துக்குடி மாவட்டம் சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோபி ஜாகிரா என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜாகிரா இரண்டாவதாக கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜாகிராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் இரண்டு செவிலியர்கள் மட்டும் சிகிச்சை அளித்தனர்.
அதன் பிறகு தண்ணீர் குடம் உடைந்து விட்டது. தாயையும் குழந்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றால்தான் காப்பாற்ற முடியும் என செவிலியர்கள் கூறியுள்ளனர். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜாகிரா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் கோபியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜாகிராவின் உடலை ஒப்படைத்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் தான் தாயும் குழந்தையும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.