புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 5 மாத ஆண் குழந்தை தண்ணீர் பேரலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் தாய் லாவண்யா, முகமூடி அணிந்த மூவர் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தாலிச் செயினை பறித்துவிட்டு, குழந்தையை தூக்கிச் சென்றதாகக் கூறிய நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கண்ணாங்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் புலியூரை சேர்ந்த லாவண்யா ஆகிய இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பத் தகராறுகளை தொடர்ந்து லாவண்யா கடந்த மூன்று மாதங்களாக தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

ஒரு நள்ளிரவில் திடீரென குழந்தையை காணவில்லை என கூச்சலிட்ட லாவண்யா, மர்ம நபர்கள் தனது தாலி பறித்து  குழந்தையை வீசி சென்றதாக கூறியதையடுத்து, உறவினர்கள் அருகிலுள்ள தண்ணீர் பேரலை தேடியபோது குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து கீரனூர் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

குழந்தையின் மரணம் மர்மமாக இருக்கின்றதால், லாவண்யா தொடர்ந்து முரணான தகவல்களை வழங்கி வருவதால், போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கணவர் மணிகண்டனிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.