தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் (35) என்ற இளைஞர், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மீது விமர்சனங்கள் மற்றும் அவதூறான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், தான் தற்கொலை செய்யப்போவதாகவும், அதற்குக் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் 234 எம்.எல்.ஏ-க்களும் தான் எனக் குற்றம் சாட்டினார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவும், வீடியோக்கள் வெளியிடத் தொடங்கி உள்ளதாகவும், அந்த வீடியோக்களில் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பிற் படாமல் செயல்படுகிற அரசியல் தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இது மட்டும் இல்லாமல், தேசிய தலைவர்கள் மீது அவதூறான மற்றும் சாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் கொண்டு, போலீசார் அவரை கண்காணித்து வந்தனர்.

மார்ச் 20ம் தேதி, புதுக்கோட்டை பகுதியில் அரிவாளை காட்டி ஒருவர் மீது மிரட்டல் செய்து பணம் பறித்த சம்பவம் தொடர்பாக, மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டதில், திருச்செந்தூர், ஏரல், சென்னை அண்ணா நகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தற்போது, தன்னால் நடந்த தவறை உணர்ந்து இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் எனக் கூறிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.