
அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ்டன் பிஷர் என்ற மூன்று குழந்தைகளின் தாய், இந்தியாவில் வளர்ப்பதே அமெரிக்காவை விட சிறந்தது எனக் கூறியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் தனது பிள்ளைகளில் ஒருவரை தெருவில் நடந்து செல்லும் வீடியோவுடன், அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்ற தன்னுடைய நோக்கங்களை விளக்கி பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் வளர்வதன் மூலம் குழந்தைகள் பல கலாச்சாரங்களை அனுபவித்து, திறந்த மனப்பாங்கும், பொருளாதார வேறுபாடுகளையும் புரிந்துகொள்வதும், பல மொழிகளில் பேசக்கற்றலும், உலகளாவிய பார்வை பெறுவதும் என பல நன்மைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். “இந்திய வாழ்க்கைமுறை என் பிள்ளைகளை தன்னம்பிக்கையுடனும், உணர்ச்சி நுண்ணறிவுடனும் வளர்த்திடும்,” எனவும் கூறியுள்ளார்.
View this post on Instagram
மேலும், இந்திய குடும்ப அமைப்பின் நெருக்கமான உறவுகள், பாசமும், ஒற்றுமையும் குழந்தைகளின் மனநிலையை வலுப்படுத்தும் என்றார். குறைந்த வளத்திலும் வாழும் மக்களின் வாழ்க்கையைப் பார்த்து பிள்ளைகள் நன்றியுணர்வு மற்றும் எளிமையான வாழ்க்கையின் அருமையை உணர்வார்கள் எனவும் அவர் கூறினார். இந்த அனுபவங்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும், தொழில் வளர்ச்சிக்கும் பெரும் ஆதாரமாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இவ்வகை கருத்துகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை பாராட்டி, “இந்திய கலாச்சாரத்தில் வளர்வது பிள்ளைகளுக்கு ஒரு பெரும் வாய்ப்பு” என தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், சிலர் “பிள்ளைகள் அமெரிக்காவிற்குத் திரும்பினால் கலாச்சார அதிர்ச்சி ஏற்படலாம். அவர்கள் எங்கும் ஒரு அயலவர் போலவே உணரலாம்” என்ற அபிப்பிராயங்களையும் பகிர்ந்துள்ளனர். 2021-ஆம் ஆண்டு தனது கணவர் மற்றும் மூன்று மகள்களுடன் இந்தியா வந்த கிரிஸ்டன் தற்போது ஒரு வலைத்தள மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.