விருதுநகர் மாவட்டம் மந்திரிஓடையைச் சேர்ந்தவர் ஜெகன்.ஜெகனின் தந்தை உயிரிழந்து விட்டார். இதனால் ஜெகன் தனது தாயுடன் வசித்து வந்தார். 12-ஆம் வகுப்பு படித்த ஜெகன் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்று பெற்று வந்தார். மேலும் கபடியில் சிறந்த வீரராக திகழ்ந்த ஜெகன் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்துள்ளார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பொய்கரைப்பட்டியில் கபடி போட்டி நடந்தது. அதில் ஜெகன் இடையப்பட்டி 7 மவுண்டன் கபடி அணி சார்பில் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் எதிர் அணி வீரர்கள் சுற்றி வளைத்த போது ஜெகன் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அவருக்கு தலையின் பின்புறம் சுவாச நரம்பு மற்றும் கொண்டை நரம்பு செயலிழந்தது தெரிந்தது. இதனால் ஜெகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.