
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் ஜான் கிறிஸ்டோபர், தனது குழந்தையை பார்க்க வந்த ஒரு இளம் பெண்ணுக்கு தந்தையின் அனுமதி இல்லாமல் பார்க்க முடியாது என்று தெரிவித்தார். இதற்கு ஆத்திரமடைந்த அந்த பெண், ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், திடீரென தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இளம்பெண் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும், அவர்களுக்கு 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. 2 குழந்தைகள் தந்தையுடனும், ஒரு குழந்தை தாயுடனும் வசிக்கிறார்கள். தற்போது, அந்தப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர், மேலும் தலைமை ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, கல்வித் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.