உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், ஒரு ஜெர்மன் ஷெபேர்ட் நாய்க்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாய் சிறுவனை பார்த்து குரைத்தது.

இதனால் கோபம் கொண்ட அந்த சிறுவனின் தந்தை, அந்த நாயை முதலில் தடியால் அடித்து காயப்படுத்தியுள்ளார். பின்னர் தனது ஸ்கார்பியோ காரின் பின்புறம் அந்த நாயை கட்டி மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நாயின் உரிமையாளர் சுதீர் இந்தோரியா புகார் அளித்துள்ளார். அவரது ஜெர்மன் ஷெபேர்ட் நாய் வழக்கம்போல் வீட்டின் வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

அருகே சென்ற சிறுவனை பார்த்து நாய் குரைத்ததால் அந்த சிறுவனின் தந்தை கடுமையாக தாக்கியதுடன், பின்னர் வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றுள்ளார். கடைசியில், நாயை காயமடைந்த நிலையில் சாலையில் வீசிவிட்டு விட்டு சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த கோர சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதுடன், வன்கொடுமை செய்த நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த நாய்க்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அது மீண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபோன்ற வன்கொடுமைகள் மீதான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.