சென்னை மதுரவாயல் பகுதியில் பிரியா (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா (24) என்ற மகள் இருக்கிறார். இதில் கீர்த்திகாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஜெயசீலன் (32) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் ஜெயசீலன் அடிக்கடி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்ததால் கடந்த 3 வருடங்களாக கீர்த்திகா தன் தாய் வீட்டில் கணவரை பிரிந்து வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜெயசீலன் தன் மாமியார் வீட்டுக்கு சென்று தன் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பிரியா தனியாக வீடு பார்த்த பிறகு தன் மகளை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இதனால் ஜெயசீலன் தன் மாமியாருடன் தகராறு செய்த நிலையில் ஒரு கட்டத்தில் பெரும் சண்டையாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த மருமகன்  பிரியாவின் தலையில் கல்லை தூக்கி போட்டார். இதில் பிரியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தன் மனைவியை அனுப்பி வைக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ஜெயசீலனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயசீலனை சிறையில் அடைத்துள்ளனர்.