
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த சுவாதி கேசவாணி என்ற பெண் தனது வீட்டிற்குள் மூன்று நான்கு திருடர்கள் நுழைந்து தன்னை கட்டி போட்டுவிட்டு சுமார் 18 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சடைந்த போலீசார் மோப்பநாய் உதவியுடன் அவரது வீட்டிற்கு சோதனைக்கு சென்றனர். ஆனால் மோப்ப நாயோ தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களையே சுற்றி சுற்றி வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சுவாதி தான் பணத்தை எடுத்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்காக மாந்திரீகம் செய்யும் விஜய் பாண்டே என்பவரை சந்திக்க சென்றதாகவும் அவர் தனது கணவர் பல மாந்திரீக பூஜைகளை செய்திருப்பதாகவும் அதனால் சுவாதி மற்றும் அவரது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று விஜய் பாண்டே கூறியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க தான் மாற்று மாந்திரீகம் செய்வதாகவும் அதற்கு முப்பது லட்சம் செலவாகும் என்று கூறி பணம் கேட்டுள்ளார் விஜய் பாண்டே. இதை நம்பிய சுவாதி தனது கணவன் வீட்டில் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
அதன் பிறகு தான் விஜய் பாண்டே பணம் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து நாடகம் ஆட அறிவுறுத்தியுள்ளார். அதன்படி சுவாதியும் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விஜய் பாண்டேயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.