
அதிமுக கட்சியின் 53-ம் ஆண்டு துவக்க விழா அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இதனை முன்னிட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்த நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்திருந்தார். அதோடு அவர் எம்ஜிஆரை புகழ்ந்தும் பேசியிருந்தார். அதாவது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாரம்பரியமும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையும் தலைமுறை தலைமுறையாக லட்சக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற ஒரு ஆட்சி போன்று நமது அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக எம்ஜிஆர் ஆட்சி இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த மாபெரும் இயக்கம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்ததற்கு தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம் தெரிவித்துள்ளார். அதாவது திடீரென எம்ஜிஆர் மீது பவன் கல்யாண்க்கு பாசம் பொங்கியது ஏன் என்று வினவியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திடீரென்று எம்ஜிஆர் மீது ஏன் இவ்வளவு அன்பு. மேலிடத்திலிருந்து வந்த உத்தரவா? நான் சும்மாதான் கேட்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சமீப காலமாகவே திருப்பதியில் லட்டு உள்ளிட்ட விவகாரங்களில் பிரகாஷ்ராஜ் மற்றும் பவன் கல்யாண் இடையே வார்த்தை மோதல் என்பது நிலவிவரும் நிலையில் தற்போது எம்ஜிஆரை புகழ்ந்து பவன் கல்யாண் பேயுள்ளதை பிரகாஷ் ராஜ் சீண்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.