
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் எம்புரான். இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முல்லை பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து சர்ச்சை வசனம் இடம் பெற்றதால் இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் 2002 ஆம் வருடம் நடைபெற்ற குஜராத் கலவரத்தை நினைவு கூறும் வகையிலும், இந்துக்கள் குறித்தும் இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றதற்கு கண்டன குரல்கள் எழுந்துள்ளது. இது படத்தை நான்கு தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ளார்கள். இதில் கோகுலம் நிதி நிறுவன அதிபர் கோகுலம் கோபாலகிருஷ்ணன் ஒரு தயாரிப்பாளர் ஆவார்.
இவருடைய இந்த நிறுவனமானது கடந்த 2017 ஆம் வருடம் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது. இந்த நிலையில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றதாக முகாந்திரம் இருப்பதாக அமலாக்க துறைக்கு வருமானவரித்துறை சார்பாக தகவல் தெரிந்துள்ளது. இதனால் அவருடைய கொச்சி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் சென்னையில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இந்த நிலையில் கோகுலம் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.