
உத்தரப்பிரதேசம், எத்தாவா மாவட்டத்தில் நில சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் 25 வயதான அஞ்சலி என்ற பெண்ணை கொலை செய்த சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் 26 வயதான சிவேந்திர யாதவ் மற்றும் அவரது கூட்டாளியான 19 வயதான கவுரவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில், அவர்கள் அஞ்சலியை சொத்து பத்திரங்களை வழங்கும் காரணத்தை கூறி அழைத்து, முதலில் மதுபானம் குடிக்க வைத்த பிறகு, கழுத்தை நெறித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது உடலை எரித்துவிட்டு, ஆற்றில் எறிந்துள்ளனர்.
ஐந்து நாட்களாக காணாமல் போன அஞ்சலியின் சடலம், ஆற்றில் பலத்த சிதைவுடன் கிடைத்தது. மேலும், ஒருவர் தனது தந்தைக்கும் மனைவிக்கும் வீடியோ காலில் அஞ்சலியின் சடலத்தைக் காட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அஞ்சலியின் குடும்பம், அருகிலுள்ள கால்வாயில் எரித்த ஸ்கூட்டரை கண்டுபிடித்ததையடுத்து போலீசில் புகார் அளித்தனர். அஞ்சலியின் சகோதரி கீரண் கூறுகையில், “அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் பெற்று, நில பத்திரங்களை வழங்குவதாகக் கூறி கொலை செய்துள்ளார்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். போலீசாரிடம் விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.