
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் சூரி விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டு காளி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கருடன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, சீம ராஜா படப்பிடிப்பின் போது சூரி அண்ணனிடம் சில கதைகளை தேர்வு செய்து ஹீரோவாக நடிக்குமாறு கூறினேன். அதற்கு அவர் தயங்கினார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாக என்னிடம் கூறினார். அதோடு அவருடைய இயக்கத்தில் நடிக்க பதட்டமாக இருக்கிறது என்றும் கூறினார். நான் அவரிடம் கண்ணை மூடிக்கொண்டு வெற்றிமாறன் படத்தில் நடிக்குமாறு கூறினேன். ஏனெனில் காமெடி வேடங்களில் நடிப்பவர்களுக்கு எமோஷன், சீரியஸ் வேடங்கள் போன்றவைகள் எளிதாக வந்துவிடும். அதோடு காமெடி வேடங்களில் நடிப்பவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதற்கு இன்னொரு உதாரணம் சூரி அண்ணன். மேலும் சீரியசான கதாபாத்திரங்களில் நடிப்பவர்களால் எளிதாக காமெடி வேடங்களில் நடிக்க முடியாது. அது மிகவும் கடினம் என்று கூறினார்.